3901
தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம் 
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது 
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள் 
மணவாளன் பாத மலர்   
3902
திருவாம்என் தெய்வமாம் தௌ;ளமுத ஞானக் 
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின் 
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ் 
மாப்பிள்ளை பாத மலர்    
3903
என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின் 
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச் 
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை 
மாலைஇட்டான் பாதமலர்    

--------------------------------------------------------------------------------

 பரசிவ நிலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3904
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் 

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் 
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் 

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் 
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம் 

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் 
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்    
3905
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம் 

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம் 
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம் 

நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம் 
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம் 

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம் 
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம் 

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்