3916
துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் 

சோதியுட் சோதியே எனது 
மதிவளர் மருந்தே மந்திர மணியே 

மன்னிய பெருங்குண மலையே 
கதிதரு துரியத் தனிவெளி நடுவே 

கலந்தர சாள்கின்ற களிப்பே 
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே    
3917
சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ் 

செல்வமே என்பெருஞ் சிறப்பே 
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே 

நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே 
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத் 

திருந்தர சளிக்கின்ற பதியே 
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே    
3918
உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

ஒள்ளிய தௌ;ளிய ஒளியே 
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே 

மந்திரத் தாற்பெற்ற மணியே 
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில் 

நிறைந்தர சாள்கின்ற நிதியே 
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே   
3919
மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

மெய்யறி வானந்த விளக்கே 
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே 

கதிர்நடு வளர்கின்ற கலையே 
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப் 

பால்அர சாள்கின்ற அரசே 
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே   ஈ 
3920
இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

இன்பமே என்னுடை அன்பே 
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும் 

திகழுறத் திகழ்கின்ற சிவமே 
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல் 

வெளிஅர சாள்கின்ற பதியே 
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே