3921
அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

அரும்பெருஞ் சோதியே எனது 
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப் 

புறம்விடா தாண்டமெய்ப் பொருளே 
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில் 

மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே 
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே    
3922
வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

மாபெருங் கருணைஎம் பதியே 
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா 

உலகமும் நிறைந்தபே ரொளியே 
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால் 

வயங்கும்ஓர் வெளிநடு மணியே 
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே    
3923
தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே 
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே 

நண்புகொண் டருளிய நண்பே 
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து 

வயங்கிய தனிநிலை வாழ்வே 
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே 

பழுத்தபே ரானந்தப் பழமே    

--------------------------------------------------------------------------------

 திருவடி நிலை 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3924
உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் 

உவப்பிலா அண்டத்தின் பகுதி 
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த 

அவைஎலாம் புறத்திறைச் சார்பில் 
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் 

றிருந்தென விருந்தன மிடைந்தே 
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் 

தென்பர்வான் திருவடி நிலையே    
3925
தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா 

யேச்சுரன் சதாசிவன் விந்து 
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி 

நவில்பர சிவம்எனும் இவர்கள் 
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் 

இடதுகாற் கடைவிரல் நகத்தின் 
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற் 

கண்டனன் திருவடி நிலையே