3931
மன்றஓங் கியமா மாயையின் பேத 

வகைதொகை விரிஎன மலிந்த 
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா 

உற்றன மற்றவை எல்லாம் 
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க 

நின்றசத் திகளொடு சத்தர் 
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில் 

என்பரால் திருவடி நிலையே    
3932
பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப் 

பெரியஓங் காரமே முதலா 
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம் 

என்றவற் றவண்அவண் இசைந்த 
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து 

மன்அதி காரம்ஐந் தியற்றத் 
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும் 

என்பரால் திருவடி நிலையே    
3933
பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப் 

பதிவரை நிறுவிஆங் கதன்மேல் 
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட 

வெறுவெளி எனஉல குணர்ந்த 
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர் 

திருவுருக் கொண்டுபொற் பொதுவில் 
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற 

என்பரால் திருவடி நிலையே    

--------------------------------------------------------------------------------

 காட்சிக் களிப்பு 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3934
அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை 

அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில் 
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச் 

சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப் 
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட 

பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை 
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3935
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப் 

பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக் 
காலானைக் கலைசாகாத் தலையி னானைக் 

கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா 
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை 

மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி 
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே