3941
ஆன்றானை அறிவானை அழிவி லானை 

அருட்பெருஞ்ஸோ தியினானை அலர்ந்த ஸோதி 
மூன்றானை இரண்டானை ஒன்றானானை 

முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில் 
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச் 

சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை 
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3942
தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால் 

சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை 
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை 

வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை 
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை 

மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் 
ஈய்ந்தானை() ஆய்ந்தவர்தம் இதயத் தானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே   

 () ஈந்தானை - முதற் பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க  
3943
நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை 

நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி 
நின்றானைப் பொன்றாத நிலையி னானை 

நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம் 
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை 

ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல் 
என்றானை என்றும்உள இயற்கை யானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    

--------------------------------------------------------------------------------

 கண்கொளாக் காட்சி 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3944
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங் 

காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத் 
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத் 

தன்னருளும் தன்பொருளும் தானே என்பால் 
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும் 

குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை 
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே 

ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3945
விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம் 

விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்() 
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச் 

சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம் 
தரித்தானைத் தானேநா னாகி என்றும் 

தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம் 
எரித்தானை என்உயிருக் கின்பா னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே  

 () விரைத்தானை மெய்யே என்னை - பி இராபதிப்பு