3946
நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே 

நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி 
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத் 

துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க 
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள் 

உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள 
எட்டானை என்னளவில் எட்டி னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3947
சோற்றானைச் சோற்றில்உறும் சுகத்தி னானைத் 

துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக் 
காற்றானை வெளியானைக் கனலா னானைக் 

கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத் 
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச் 

சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம் 
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே   

 () சோறு - முத்தி முதற்பதிப்பு ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே 
3948
சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு 

செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில் 
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற 

ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம் 
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப் 

பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை 
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3949
முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே 

முளைத்தானை மூவாத முதலா னானைக் 
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக் 

காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம் 
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை 

வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும் 
இளையானை மூத்தானை மூப்பி லானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3950
புயலானை மழையானை அதிர்ப்பி னானைப் 

போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச் 
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத் 

திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே 
அயலானை உறவானை அன்பு ளானை 

அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி 
இயலானை எழிலானைப் பொழிலா னானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே