3951
தாயானைத் தந்தைஎனக் காயி னானைச் 

சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே 
மேயானைக் கண்காண விளங்கி னானை 

மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன 
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை 

வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி 
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3952
தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத் 

தானேதா னானானைத் தமிய னேனைக் 
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக் 

குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி 
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை 

அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால் 
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    
3953
உடையானை அருட்சோதி உருவி னானை 

ஓவானை மூவானை உலவா இன்பக் 
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு 

கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை 
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை 

அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின் 
இடையானை என்னாசை எல்லாந் தந்த 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    

--------------------------------------------------------------------------------

 இறை திருக்காட்சி 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3954
அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை 

அருட்பெருஞ் ஸோதியை அரசை 
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை 

வள்ளலை மாணிக்க மணியைப் 
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த 

புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் 
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான 

தீபத்தைக் கண்டுகொண் டேனே    
3955
துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத் 

துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை 
என்பொலா மணியை என்சிகா மணியை 

என்னிரு கண்ணுள்மா மணியை 
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை 

அருட்பெருஞ் ஸோதியை அடியேன் 
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த 

எந்தையைக் கண்டுகொண் டேனே