3961
ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் 

அறிவித்த அறிவைஎன் அன்பைச் 
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச் 

சுத்தசன் மார்க்கத்தின் துணிபை 
நீதியை எல்லா நிலைகளும் கடந்த 

நிலையிலே நிறைந்தமா நிதியை 
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை 

ஒளிதனைக் கண்டுகொண் டேனே    
3962
என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி 

என்னைவாழ் விக்கின்ற பதியைப் 
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே 

பொருந்திய மருந்தையென் பொருளை 
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க 

வைத்தசன் மார்க்கசற் குருவைக் 
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் 

கோயிலில் கண்டுகொண் டேனே    
3963
புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில் 

போந்தருள் அளித்தசற் குருவைக் 
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த 

கருணையங் கடவுளைத் தனது 
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே 

தோளுறப் புனைந்தமெய்த் துணையைத் 
தன்னிக ரில்லாத் தலைவனை எனது 

தந்தையைக் கண்டுகொண் டேனே    
3964
ஏங்கலை மகனே தூங்கலை எனவந் 

தெடுத்தெனை அணைத்தஎன் தாயை 
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் 

உடையஎன் ஒருபெரும் பதியைப் 
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப் 

பரிசும்இங் களித்ததற் பரத்தைத் 
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத் 

தலைவனைக் கண்டுகொண் டேனே    
3965
துன்புறேல் மகனே தூங்கலை எனஎன் 

சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை 
அன்புளே கலந்த தந்தையை என்றன் 

ஆவியைப் பாவியேன் உளத்தை 
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி 

இனிதமர்ந் தருளிய இறையை 
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என் 

வள்ளலைக் கண்டுகொண் டேனே