3966
நனவினும் எனது கனவினும் எனக்கே 

நண்ணிய தண்ணிய அமுதை 
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி 

வழங்கிய பெருந்தயா நிதியைச் 
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த 

சிவகுரு பதியைஎன் சிறப்பை 
உனலரும் பெரிய துரியமேல் வெளியில் 

ஒளிதனைக் கண்டுகொண் டேனே    
3967
கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக் 

கருதுகோற் றேன்நறுஞ் சுவையை 
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை 

ஆவியை ஆவியுட் கலந்த 
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப் 

பேசுதற் கரும்பெரும் பேற்றை 
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும் 

விளக்கினைக் கண்டுகொண் டேனே    
3968
களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக் 

களிப்பெலாம் அளித்தசர்க் கரையை 
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா 

துள்ளகத் தூறும்இன் அமுதை 
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள் 

மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக் 
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும் 

குருவையான் கண்டுகொண் டேனே    
3969
சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் 

சிதம்பர நடம்புரி சிவத்தைப் 
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் 

பதிசிவ பதத்தைத்தற் பதத்தை 
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை 

யாவுமாய் அல்லவாம் பொருளைச் 
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச் 

சாமியைக் கண்டுகொண் டேனே    
3970
ஆரண முடிமேல் அமர்பிர மத்தை 

ஆகம முடிஅமர் பரத்தைக் 
காரண வரத்தைக் காரிய தரத்தைக் 

காரிய காரணக் கருவைத் 
தாரண நிலையைத் தத்துவ பதியைச் 

சத்திய நித்திய தலத்தைப் 
பூரண சுகத்தைப் பூரண சிவமாம் 

பொருளினைக் கண்டுகொண் டேனே