3971
சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச் 

சுத்தசித் தாந்தரா சியத்தைத் 
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச் 

சமரச சத்தியப் பொருளைச் 
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில் 

தெளிந்தபே ரானந்தத் தெளிவை 
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின் 

மெய்மையைக் கண்டுகொண் டேனே   
3972
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான 

சபைநடம் புரிகின்ற தனியைத் 
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச் 

சத்துவ நித்தசற் குருவை 
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா 

ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை 
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார 

நீதியைக் கண்டுகொண் டேனே    
3973
அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும் 

அருட்பெருஞ் சோதியை உலகக் 
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும் 

காட்சியைக் கருணையங் கடலை 
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல 

ஒளியையும் உதவிய ஒளியைக் 
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக் 

கோயிலில் கண்டுகொண் டேனே    
3974
சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த 

சமரச சத்திய வெளியைச் 
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த் 

துலங்கிய ஸோதியைச் சோதிப் 
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த 

பரமசன் மார்க்கமெய்ப் பதியைச் 
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத் 

தெய்வத்தைக் கண்டுகொண் டேனே   
3975
அடிநடு முடியோர் அணுத்துணை யேனும் 

அறிந்திடப் படாதமெய் அறிவைப் 
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த 

பதியிலே விளங்குமெய்ப் பதியைக் 
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற் 

கடைக்கணித் தருளிய கருணைக் 
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக் 

கோயிலில் கண்டுகொண் டேனே