3976
பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும் 

பற்றறத் தவிர்த்தருட் பரிசும் 
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு 

நல்கிய நண்பைநன் னாத 
இயமுற வெனது குளநடு நடஞ்செய் 

எந்தையை என்னுயிர்க் குயிரைப் 
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப் 

பொற்புறக் கண்டுகொண் டேனே   
3977
கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக் 

ககனத்தைக் காற்றினை அமுதை 
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா 

நின்மல நிற்குண நிறைவை 
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை 

வரவுபோக் கற்றசின் மயத்தை 
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை 

அன்பினிற் கண்டுகொண் டேனே   
3978
மும்மையை எல்லாம் உடையபே ரரசை 

முழுதொருங் குணர்த்திய உணர்வை 
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம் 

வியப்புற அளித்தமெய் விளைவைச் 
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால் 

சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை 
அம்மையைக் கருணை அப்பனை என்பே 

ரன்பனைக் கண்டுகொண் டேனே   
3979
கருத்தனை எனது கண்அனை யவனைக் 

கருணையா ரமுதெனக் களித்த 
ஒருத்தனை என்னை உடையநா யகனை 

உண்மைவே தாகம முடியின் 
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற் 

றம்பலத் தருள்நடம் புரியும் 
நிருத்தனை எனது நேயனை ஞான 

நிலையனைக் கண்டுகொண் டேனே    
3980
வித்தெலாம் அளித்த விமலனை எல்லா 

விளைவையும் விளைக்கவல் லவனை 
அத்தெலாங்() காட்டும் அரும்பெறல் மணியை 

ஆனந்தக் கூத்தனை அரசைச் 
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான 

சபைத்தனித் தலைவனைத் தவனைச் 
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந் 

தெய்வத்தைக் கண்டுகொண் டேனே   

 () அத்து - செந்நிறம் முதற்பதிப்பு