3981
உத்தர ஞான சித்திமா புரத்தின் 

ஓங்கிய ஒருபெரும் பதியை 
உத்தர ஞான சிதம்பர ஒளியை 

உண்மையை ஒருதனி உணர்வை 
உத்தர ஞான நடம்புரி கின்ற 

ஒருவனை உலகெலாம் வழுத்தும் 
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம் 

ஓதியைக் கண்டுகொண் டேனே    
3982
புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப் 

புணர்த்திய புனிதனை எல்லா 
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில் 

நிறுத்திய நிமலனை எனக்கு 
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா 

வாழ்க்கையில் வாழவைத் தவனைத் 
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத் 

தந்தையைக் கண்டுகொண் டேனே    
3983
பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த 

பரமனை என்னுளே பழுத்த 
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக் 

கடவுளைக் கண்ணினுள் மணியைப் 
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப் 

பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத் 
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத் 

தந்தையைக் கண்டுகொண் டேனே    

--------------------------------------------------------------------------------

 உளம் புகுந்த திறம் வியத்தல் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3984
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் 

மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே 
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே 

திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும் 
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே 

நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் 
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன் 

உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே    
3985
படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப் 

பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே 
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும் 

அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த 
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும் 

மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக் 
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர் 

கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே