3986
உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும் 

ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய் 
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும் 

வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த 
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின் 

வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம் 
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே    
3987
தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த் 

தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு 
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே 

விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த 
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது 

நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய் 
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன் 

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே   
3988
இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் 

இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய் 
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய் 

மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த 
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் 

நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே 
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே    
3989
உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய் 

உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய் 
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த 

வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே 
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே 

சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய் 
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன் 

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே    
3990
மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய் 

வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய் 
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில் 

மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே 
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய் 

இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக் 
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே