4001
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் 

உளவுயிர் முழுவதும் ஒருங்கே 
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும் 

குறைபடாப் பெருங்கொடைத் தலைவன் 
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக் 

கருத்தெலாம் இனிதுதந் தருளித் 
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான் 

தந்தையைத் தடுப்பவர் யாரே   
4002
அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா 

தையகோ ஐயகோ அறிவின் 
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம் 

வாய்குழைந் துரைத்துரைத் துரையும் 
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர் 

மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன் 
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன் 

திருவுளம் தடுப்பவர் யாரே   
4003
கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க் 

கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க் 
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த 

கொள்கையாய்க் கொள்கையோ டளவா 
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால் 

அருட்பெருஞ் ஸோதியாந் தலைவன் 
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன் 

வண்மையைத் தடுப்பவர் யாரே    

--------------------------------------------------------------------------------

 கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4004
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன் 

அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத் 
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம் 

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை 
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த 

வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக் 
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே    
4005
திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத் 

திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா 
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை 

உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை 
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை 

நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது 
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே