4011
கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும் 

கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில் 
ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி 

உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித் 
தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த 

தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும் 
காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே    
4012
நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும் 

நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும் 
ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம் 

ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும் 
வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற 

வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக் 
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே    
4013
மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல 

வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத் 
தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த 

தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப் 
பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் 

புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக் 
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால் 

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே    

--------------------------------------------------------------------------------

 ஆண்டருளிய அருமையை வியத்தல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4014
அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ 
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ 
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ 
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே  
4015
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ 
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ 
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ 
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே