4021
தடையிலா தெடுத்த அருளமு தென்கோ 

சர்க்கரைக் கட்டியே என்கோ 
அடைவுறு வயிரக் கட்டியே என்கோ 

அம்பலத் தாணிப்பொன் என்கோ 
உடைய மாணிக்கப் பெருமலை என்கோ 

உள்ளொளிக் குள்ளொளி என்கோ 
இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே 

என்னைஆண் டருளிய நினையே    
4022
மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ 

மன்னும்ஆ கமப்பொருள் என்கோ 
குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ 

குணப்பெருங் குன்றமே என்கோ 
பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ 

பெரியஅம் பலத்தர சென்கோ 
இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங் 

கென்னைஆண் டருளிய நினையே    
4023
என்உளம் பிரியாப் பேர்ஒளி என்கோ 

என்உயிர்த் தந்தையே என்கோ 
என்உயிர்த் தாயே இன்பமே என்கோ 

என்உயிர்த் தலைவனே என்கோ 
என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ 

என்னுடை நண்பனே என்கோ 
என்ஒரு() வாழ்வின் தனிமுதல் என்கோ 

என்னைஆண் டருளிய நினையே   

 ()என்பெரு - பி இரா பதிப்பு  

--------------------------------------------------------------------------------

 இறைவனை ஏத்தும் இன்பம் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4024
கருணைமா நிதியே என்னிரு கண்ணே 

கடவுளே கடவுளே என்கோ 
தருணவான் அமுதே என்பெருந் தாயே 

தந்தையே தந்தையே என்கோ 
தெருள்நிறை மதியே என்குரு பதியே 

தெய்வமே தெய்வமே என்கோ 
அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி 

ஆண்டவ நின்றனை அறிந்தே   
4025
ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ 

ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர் 
வெட்டியே என்கோ வெட்டியில்() எனக்கு 

விளங்குறக் கிடைத்தஓர் வயிரப் 
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே 

பெரியவர் வைத்ததோர் தங்கக் 
கட்டியே என்கோ அம்பலத் தாடும் 

கருணையங் கடவுள்நின் றனையே   

 () கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு