4031
தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த 

தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ 
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் 

தனில்உறும் அனுபவம் என்கோ 
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள் 

ஓங்கிய ஒருமையே என்கோ 
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ 

திருச்சிற்றம் பலத்தவ நினையே    
4032
யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில் 

ஓங்கிய காட்சியே என்கோ 
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள் 

இசைந்தபே ரின்பமே என்கோ 
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச் 

சார்ந்தசற் குருமணி என்கோ 
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா 

மன்றிலே நடிக்கின்றோய் நினையே    
4033
இரவிலா தியம்பும் பகலிலா திருந்த 

இயற்கையுள் இயற்கையே என்கோ 
வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்() 

வயங்கிய வான்பொருள் என்கோ 
திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே 

செய்ததோர் சித்தனே என்கோ 
கரவிலா தெனக்குப் பேரருட் சோதி 

களித்தளித் தருளிய நினையே   

 () நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு  

--------------------------------------------------------------------------------

 பாமாலை ஏற்றல் 
நேரிசை வெண்பா 
4034
நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித் 
தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த 
சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த 
நல்லான்தன் தாட்கே நயந்து   
4035
சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும் 
வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ 
காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச் 
சேமநட ராஜன் தெரிந்து