4036
ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம் 
வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார 
விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த 
எந்தைநட ராஜன் இசைந்து    
4037
இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க 
என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு 
நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார் 
ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து    
4038
என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என் 
தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக் 
காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச் 
சாலையிலே வாஎன்றான் தான்    
4039
என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப் 
பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில் 
நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய் 
வல்லான் திருக்கருணை வாய்ப்பு    
4040
முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம் 
அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம் 
பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத் 
தாரா வரங்களெலாம் தந்து