4046
அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன் 
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே 
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும் 
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே    
4047
இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல 
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை 
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில் 
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே    
4048
உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே 
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும் 
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த் 
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே   
4049
பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல் 
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே 
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த 
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே   
4050
ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு 
மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு 
வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல் 
செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே