4051
எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல 
சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த 
தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும் 
செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே    
4052
குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம் 
பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக் 
கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற 
திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே    
4053
கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார் 
சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல 
கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும் 
செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே    
4054
காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம் 
வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால் 
கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று 
சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே    
4055
சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது 
கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமம்இலார் 
நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே 
செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே