4056
ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே 
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின் 
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன் 
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே    

--------------------------------------------------------------------------------

 செய்பணி வினவல் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4057
அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத் 
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன் 
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே    
4058
ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே 
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் 
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே    
4059
அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச் 
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன் 
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே    
4060
பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச் 
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன் 
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே