4061
ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத் 
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன் 
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே    
4062
இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித் 
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன் 
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே    
4063
மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச் 
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் 
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே   
4064
ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித் 
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன் 
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே   
4065
ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச் 
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே 
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் 
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே