4071
களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே 

களித்தனன் கண்கள்நீர் ததும்பித் 
துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே 

துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் 
தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே 

தெளித்தனன் செய்கைவே றறியேன் 
ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் 

உரைப்பதென் அடிக்கடி உனக்கே    
4072
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் 
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் 
கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென் குறிப்பினில் குறித்ததொன் றிலையே 
ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே    
4073
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன் 
உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன் 
கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே 
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே    
4074
திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும் சிறிதும்நான் விழைந்திலேன் இந்த 
உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும் உவப்பிலேன் உலகுறு மாயைக் 
கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ கடவுளே எனத்துயர்ந் திருந்தேன் 
அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான் அடிக்கடி உரைப்பதென் நினக்கே    
4075
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் 
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் 
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன் 
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே