4076
பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ 
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச் 
சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன் 
ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே   
4077
ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும் 
என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ இயல்அருட் சித்திகள் எனைவந் 
தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன் 
உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே    
4078
கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித் தொருமையில் கலந்தே 
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற் றோங்குதல் என்றுவந் துறுமோ 
வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன் 
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே    

--------------------------------------------------------------------------------

 சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4079
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் 
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே 

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் 
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் 

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் 
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் 

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே    
4080
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும் 
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் 

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் 
எய்யாத() அருட்சோதி என்கையுறல் வேண்டும் 

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும் 
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும் 

நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே   

 () எய்யாத - அறியாத முதற்பதிப்பு