4086
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும் 
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் 

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் 
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே 

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் 
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் 

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே    
4087
அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும் 
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும் 

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும் 
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும் 

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும் 
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும் 

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே    
4088
அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும் 
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான 

மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும் 
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந் 

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் 
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும் 

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே    
4089
அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும் 
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும் 

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும் 
கமையாதி() அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம் 

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும் 
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும் 

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே   

 () கமை - பொறுமை முதற்பதிப்பு  

--------------------------------------------------------------------------------

 அருள் விளக்க மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4090
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே 

அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே 
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே 

என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே 
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே 

மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா 

தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே