4091
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த 

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே 
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே 

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே 
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே 

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே 
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே  
4092
இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே 

ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே 
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே 

அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே 
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே 

இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே 
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே 

தூயதிரு அடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே    
4093
ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே 

உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே 
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே 

பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே 
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே 

நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே 
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 

களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே    
4094
மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து 

வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே 
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச் 

சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே 
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே 

அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே 
இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 

என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே    
4095
கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே 

காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே 
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை 

சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா 
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி 

என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே 
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே 

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே