4106
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் 

சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே 
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின் 

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி 
இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி 

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தௌ; ளமுதே 
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே 

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே   
4107
மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே 

மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே 
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே 

விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே 
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங் 

கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால் 
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே 

நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே    
4108
கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் 

கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே 
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே 

பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே 
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம 

வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப் 
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது 

பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே    
4109
உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே 

உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே 
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே 

பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே 
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே 

மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே 
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே 

சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே    
4110
நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் 

ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே 
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும் 

ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே 
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் 

தேகமும்உள் உயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே 
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் 

வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே