4126
தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே 

சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே 
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே 

பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே 
விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும் 

மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே 
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே 

புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே    
4127
வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள் 

மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே 
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம் 

ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பேர் ஒளியே 
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச் 

சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே 
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே 

விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே    
4128
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே 

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே    
4129
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் 

கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச் 
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த் 

தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய் 
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய் 

மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே 
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே 

ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே    
4130
திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும் 

சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய் 
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே 

மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப் 
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே 

படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே 
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில் 

ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே