4136
ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் 

உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது 
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம் 

பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே 
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச் 

செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே 
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில் 

காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே    
4137
இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே 

இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே 
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப் 

போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே 
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி 

மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே 
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே    
4138
நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி 

நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே 
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே 

ஒள்ளியதௌ; ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே 
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் 

வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே 
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத் 

திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே    
4139
நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி 

நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே 
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும் 

கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே 
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே 

பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே 
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த 

ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே    
4140
நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே 

நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்() மலர்க்கால் 
தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித் 

தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே 
ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே 

எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே 
தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே   

 () முடிமேல் - முதற்பதிப்பு பொ சு, ச மு க, மடிமேல் - பி இரா, ஆ பா