4141
மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய 

முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே 
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன் 

அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே 
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப் 

பரநாத நாட்டரசு பாலித்த பதியே 
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே 

என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே    
4142
இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே 

இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித் 
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத் 

தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே 
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே 

இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே 
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும் 

முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே   
4143
கையாத தீங்கனியே கயக்காத அமுதே 

கரையாத கற்கண்டே புரையாத கரும்பே 
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே 

போகாத புனலேஉள் வேகாத காலே 
கொய்யாத நறுமலரே கோவாத மணியே 

குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே 
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே 

தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே    
4144
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே 

ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே 
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே 

பாராத பார்வையிலே பதியாத பதிப்பே 
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே 

நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே 
அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 

அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே    
4145
சாகாத கல்வியிலே தலையான நிலையே 

சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே 
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே 

ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே 
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் 

குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே 
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் 

மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே