4146
சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித் 

தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய் 
நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி 

நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே 
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே 

சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே 
புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில் 

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே    
4147
நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி 

நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித் 
தான்அளக்கும் அளவதிலே முடிவதெனத் தோற்றித் 

தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே 
வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி 

வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத் 
தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில் 

திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே   
4148
திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத் 

தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி 
நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து 

நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே 
வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே 

வான்நடுவே இன்பவடி வாய்இருந்த பொருளே 
பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப் 

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே   
4149
என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே 

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே 
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே 

தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே 
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த 

மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே 
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே 

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே    
4150
மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் 

வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப் 
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப் 

பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே 
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே 

ஊறுகின்ற தௌ;ளமுதே ஒருதனிப்பே ரொளியே 
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே 

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே