4156
தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் 

தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற 
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற 

முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும் 
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி 

இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே 
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே 

இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே    
4157
பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே 

பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும் 
விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும் 

மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற 
உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய் 

ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க் 
கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே 

கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே    
4158
வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே 

மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே 
மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே 

வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே 
கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து 

கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே 
ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே   
4159
கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது 

குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே 
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் 

வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே 
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா 

நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே 
புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் 

புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே    
4160
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் 

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் 
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக 

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே 
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் 

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே 
மயர்ப்பறுமெய்த்() தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே   

 () மயர்ப்பு - சோர்வு முதற்பதிப்பு