4161
வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும் 

மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் 
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக 

அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே 
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான் 

ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே 
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில் 

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே    
4162
கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும் 

குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது 
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம் 

பயந்தீர்த்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே 
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே 

நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண 
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே    
4163
தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் 

சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி 
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி 

நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே 
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில் 

ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே 
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே    
4164
அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் 

அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் 
தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச் 

செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே 
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே 

போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே 
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில் 

வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே    
4165
வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் 

மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது 
பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த 

பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே 
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் 

செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே 
அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே