4166
ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை 

அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து 
நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி 

நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து 
மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய 

மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே 
ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே    
4167
பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே 

பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே 
மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய 

வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே 
மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே 

விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே 
ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே 

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே   
4168
மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும் 

விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும் 
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக 

எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே 
அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா 

ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே 
பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும் 

பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே    
4169
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 

அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் 
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் 

கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே 
விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன 

வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக் 
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே 

குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே   
4170
சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம் 

தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் 
இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி 

எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள் 
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா 

தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச் 
சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதௌ; ளமுதே 

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே