4171
பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப் 

புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் 
செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச் 

செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க 
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும் 

ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே 
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே 

நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே    
4172
உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும் 

ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் 
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய 

பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே 
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே 

நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான் 
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே    
4173
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் 

கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் 
கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும் 

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் 
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே 

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே 
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில் 

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே    
4174
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா 

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே 
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ 

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே 
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே 

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே 
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற 

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே    
4175
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே 

என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே 
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ 

திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே 
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி 

அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே 
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் 

ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே