4181
காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே 

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே 
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் 

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச் 
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே 

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும் 

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே   
4182
சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும் 

சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே 
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே 

துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே 
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே 

நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே 
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில் 

பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே    
4183
ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த 

அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே 
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம் 

மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம் 
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை 

தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம் 
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன் 

நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே    
4184
கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே 

கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே 
இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும் 

இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே 
மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே 

வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே 
பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில் 

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே    
4185
அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி 

அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து 
கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக் 

கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே 
வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே 

மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே 
படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில் 

பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே