4186
எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர் 

ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே 
மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து 

வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து 
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும் 

துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில் 
சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே 

சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே    
4187
இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை 

எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி 
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே 

அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே 
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர் 

திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே 
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும் 

பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே    
4188
குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக் 

கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து 
மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து 

மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித் 
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும் 

தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே 
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே    
4189
தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத் 

தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே 
மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி 

வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து 
நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய் 

நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி 
அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி 

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே    

--------------------------------------------------------------------------------

 நற்றாய் கூறல் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4190
காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ 

கண்டுகொள் கணவனே என்றாள் 
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும் 

உவந்திலேன் உண்மையீ தென்றாள் 
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த 

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள் 
மாதய வுடைய வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே