4196
பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன் 

பொங்கிய தாசைமேல் என்றாள் 
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ 

என்னள வன்றுகாண் என்றாள் 
கொன்செயும் உலகர் என்னையும் உனது 

குறிப்பையும் குறித்திலார் என்றாள் 
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே    
4197
மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு 

மேவிலை என்னையோ என்றாள் 
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல் 

நல்லவர்க் கடுப்பதோ என்றாள் 
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற 

வைத்தல்உன் மரபல என்றாள் 
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே    
4198
ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி 

ஒன்றுற ஒன்றினேன் என்றாள் 
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை 

நம்பினேன் நயந்தருள் என்றாள் 
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக் 

குழியிலே இருந்திடேன் என்றாள் 
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே    
4199
ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான் 

அன்பினால் கூடினன் என்றாள் 
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக் 

கூடுதல் கூடுமோ என்றாள் 
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப் 

பரிசெலாம் புரிந்தனன் என்றாள் 
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் 

வரத்தினால் நான்பெற்ற மகளே    

--------------------------------------------------------------------------------

 பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4200
அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான் 

அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள் 
இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த 

ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும் 
எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல் 

இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே 
சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே