4211
அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல் 

அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி 
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள் 

வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள் 
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம் 

நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே    
4212
கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் 

கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி 
எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள் 

பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள் 
மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார் 

வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே    
4213
எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால் 

எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ 
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி 

களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே 
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார் 

சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே    
4214
இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் 

ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ 
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள் 

நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள் 
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார் 

அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே    
4215
வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா 

வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி 
எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த 

அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள் 
நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார் 

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே