4221
மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே 

வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ 
இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள் 

மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள் 
அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார் 

அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே    
4222
கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே 

கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ 
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி 

உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள் 
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார் 

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே    
4223
காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது 

கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி 
ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாதே 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி 

கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே 
நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார் 

நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே    
4224
கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது 

கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ 
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை 

நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள் 
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே 

பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே    
4225
கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால் 

கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி 
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ் 

என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன் 

மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள் 
விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார் 

விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே