4226
மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது 

வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ 
இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி 

புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி 
பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார் 

பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே    
4227
தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது 

தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி 
ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த 

கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள் 
சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார் 

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே    
4228
தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர் 

தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி 
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள் 

பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள் 
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார் 

கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே    
4229
அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம் 

அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ 
இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள் 

களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள் 
விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான் 

வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே    
4230
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர் 

மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி 
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார் 

குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள் 
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார் 

வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே