4246
சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே 
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே 
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே 
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே    
4247
திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே 
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே 
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே 
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே    
4248
நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே 
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே 
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே 
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே    
4249
தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே 
நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே 
துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே 
சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே    
4250
நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே 
இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே 
திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே 
கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே