4251
அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே 
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே 
மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே 
பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே   
4252
நிதிவளர் நிலமே நிலம்வளர் நிதியே நிதிநிலம் வளர்தரு நிறைவே 
மதிவளர் நலமே நலம்வளர் மதியே மதிநலம் வளர்தரு பரமே 
கதிவளர் நிலையே நிலைவளர் கதியே கதிநிலை வளர்தரு பொருளே 
பதிவளர் பதமே பதம்வளர் பதியே பதிபதம் வளர்சிவ பதியே    

--------------------------------------------------------------------------------

 ஞானோபதேசம் 
கலிவிருத்தம் ; பண்: நட்டராகம் 
4253
கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே 
விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே 
தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே 
உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே   
4254
வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே 
வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே 
அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே 
ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே    
4255
அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே 
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே 
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே 
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே