4261
பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே 
அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய் 
எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம் 
உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே    
4262
நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே 
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே 
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய் 
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே   

--------------------------------------------------------------------------------

 ஆரமுதப் பேறு 
கலிவிருத்தம் ; பண்: நட்டராகம் 
4263
விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே 
கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே 
பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய் 
அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே   
4264
விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே 
தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே 
கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே 
அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4265
துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே 
செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா 
எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும் 
அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே