4276
வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் 

மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும் 
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி 

நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி   
4277
தொம்பத உருவொடு தத்பத வெளியில் 

தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும் 
எம்பதமாகி இசைவாயோ தோழி 

இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி    
4278
சின்மய வெளியிடைத் தன்மய மாகித் 

திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும் 
என்மய மாகி இருப்பாயோ தோழி 

இச்சை மயமாய் இருப்பாயோ() தோழி   

 () மயமாய்ப் பொருப்பாயோ - ஆ பா பதிப்பு  
4279
நவநிலை மேற்பர நாதத் தலத்தே 

ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும் 
மவுனத் திருவீதி வருவாயோ தோழி 

வாராமல் வீண்பழி தருவாயோ தோழி    
4280
ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில் 

அதுவது வாநடம் நான்காணல் வேண்டும் 
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி 

ஏறி இழிந்திங் கிறப்பாயோ() தோழி   

 () இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு