4291
தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே 
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே 
தடையாதும் இல்லைகண் டாய்    
4292
கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப் 
பையுள்() உனக்கென்னை யோ - நெஞ்சே 
பையுள் உனக்கென்னை யோ   

 () பையுள் - வருத்தம் முதற்பதிப்பு 
4293
என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே 
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே 
உன்னுவ தென்னைகண் டாய்    
4294
நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே 
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே 
ஏன்பற்று வாயென்ப தார்    
4295
தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத் 
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே 
தத்துவ முன்னுவ தேன்