4331
ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம் 
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம் 
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம் 
சத்திய ஞான தயாநிதி பாதம் ஆடிய    
4332
தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம் 
தந்தையு மாகித் தயவுசெய் பாதம் 
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம் 
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம்  ஆடிய    
4333
எண்ணிய வாறே எனக்கருள் பாதம் 
இறவா நிலையில் இருத்திய பாதம் 
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம் 
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்  ஆடிய   
4334
ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம் 
ஆதி அனாதியும் ஆகிய பாதம் 
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம் 
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம் ஆடிய   
4335
அருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம் 
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் 
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம் 
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம்  ஆடிய