4376
இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய 

இதுதரு ணம்இங்கு வாரீர் 

இன்னமு தாயினீர் வாரீர்  வாரீர்  
4377
இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள் 

இருக்கின்ற நாதரே வாரீர் 

இருக்கின் பொருளானீர் வாரீர்  வாரீர்    
4378
இரவும் பகலும் இதயத்தி லூறி 

இனிக்கும் அமுதரே வாரீர் 

இனித்தரி யேன்இங்கு வாரீர்  வாரீர்  
4379
இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று 

இதுதரு ணம்இங்கு வாரீர் 

இருமையும் ஆயினீர் வாரீர்  வாரீர்    
4380
இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற் 

கிதுதரு ணம்இங்கு வாரீர் 

இனியவ ரேஇங்கு வாரீர் வாரீர்