4381
இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே 

இத்தரு ணம்இங்கு வாரீர் 

இதநடஞ் செய்கின்றீர் வாரீர்  வாரீர்    
4382
இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம் 

இதுஎன் றளித்தீரே வாரீர் 

இதயத் திருந்தீரே வாரீர் வாரீர்    
4383
இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல் 

எங்கும் நிறைந்தீரே வாரீர் 

இந்தெழில் வண்ணரே வாரீர்  வாரீர்   
4384
இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை 

ஏறவைத் தீர்இங்கு வாரீர் 

இறுதியி லீர்இங்கு வாரீர் வாரீர்    
4385
ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக் 

கின்பமும் ஆயினீர் வாரீர் 

அன்பருக் கன்பரே வாரீர்  வாரீர்