4411
ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள் 

ஆக்க மடுத்தீரே வாரீர் 

தூக்கம் தவிர்த்தீரே வாரீர் வாரீர்    
4412
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென் 

றோமை அறிவித்தீர் வாரீர் 

சேமஞ் செறிவித்தீர் வாரீர்  வாரீர்   
4413
ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத 

யோகம் கொடுத்தீரே வாரீர் 

போகம் கொடுத்தீரே வாரீர் வாரீர்   
4414
ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை 

ஓதிய நாதரே வாரீர் 

ஆதிஅ னாதியீர் வாரீர்  வாரீர்   
4415
என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி 

என்குறை என்முன்னீர் வாரீர் 

தன்குறை இல்லீரே வாரீர்  வாரீர்